எனது ஹீரோவுடன் ஒரு இனிய சந்திப்பு

சுஜாதா ஒரு முறை சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது " உங்களது ஹீரோவை நேரில் பார்த்தபின்பு அவர்கள் பற்றிய கண்ணோட்டத்தில் / கருத்தில் / பிரியத்தில் மாற்றம் வரலாம்" - ஓரளவுக்கு இது சரி என்றே நம்மில் நிறைய பேருக்கு வாய்த்த அனுபவங்கள் அறுதியிட்டிருக்கும்., எனக்கு இது நேர் எதிராக நடந்தது...

எனது ஹீரோ கேரளாவை சேர்ந்தவர். நான் படம் பிடித்து பெருமையாய் வீட்டில் மாட்டவேண்டும் என்று நினைத்த மூன்று ஹீரோக்களில் இவரும் ஒருவர். மீதி இருவர் - இளையராஜா , விஸ்வநாதன் ஆனந்த். ஆனந்துடன் செஸ் விளையாடி மகிழலாம், அவரது திறனுக்கு பத்து சதவீதம் கூட அடியேன் நெருங்கமுடியாது., அப்ப ...ராஜா...? எனக்கு பிடித்த இளையராஜாவுடன் .... ஹும் ஹூம்...நாலு வார்த்தை கூட பேசமுடியாது, மம்மியை கண்ட எம் எல் எ  நிலைமைதான்.அவரது திறன் அப்படி. ஆனால் இந்த ஹீரோவுடன் சரிக்கு சமமாக இல்லாவிட்டாலும் , அடிபொடியாகவாவது பேசலாம், விவாதிக்கலாம், அவரது அந்த திறனோடு நாமளும் கொஞ்சம் சண்டையிடலாம்...அப்படி ஒரு ஹீரோ எனக்கு மிக பிடித்த இந்த  ஹீரோ!

திருவனந்தபுரம் ( அலுவலக வேலையாக ) சென்றதும்  அவரது மேனேஜரின்  எண்ணுக்கு தொடர்பு கொண்டு -

" சார், ***** ருடன் பேச விரும்புகிறேன், நான் அவரது பெரிய விசிறி., நம்பர் தந்தால் மிக நன்றாக இருக்கும்"

" ..... ( சில  மவுனங்கள்) அப்படியா ம் .. சரி இந்தாருங்கள்...12345 6789"

" thanks, ரொம்ப தேங்க்ஸ் சார்"

உடனே எனது ஹீரோவை தொடர்பு கொண்டேன்

"ஹெலோ "

"எஸ்"

"சார், இது ***** தானே?"

"எஸ்" 

"நான் உங்க பரம விசிறி, உங்களுடன் ஒரு போட்டோ எடுத்து கொள்ள விரும்புகிறேன், நேரம் தர இயலுமா "?

சில பல விபரங்கள் என்னை குறித்து கேட்டார், பின்பு ஒரு மூன்று  நட்சத்திர ஹோட்டலின் முகவரி தந்து சனி ( 7 ஏப்ரல் ) இரவு எட்டு மணி என நேரம் குறித்துகொடுத்தார்.

மிக சரியாக எட்டு மணிக்கு அந்த ஹோட்டலில் வாசலில் ஆட்டோவில் இருந்து கொண்டு அழைத்தேன், அவரே எடுத்து., உள்ளே வாருங்கள், 'பாரி'ன் வாசலில் மேனேஜர் உங்களை அழைத்து வருவார் என்றார். அதே போல் என்னை அடையாளம் கண்டு அவரது மேனேஜர் என்னை அழைத்து 'பாரி'ன் கதவினை நோக்கி நடந்து செல்ல, எனது ஹீரோ எதிரில் கதவினை திறந்து வெளியே வந்து கொண்டு என்னை நேரில் வந்தே வரவேன்றார், குளிர்ந்து போனேன்.

சில பல சம்பிரதாய பேச்சுகளுக்கு பின் ( குடிக்கிறீர்களா என்றார்., இல்லே சார் எனக்கு பழக்கமில்லை என்றேன், சரி என்று அவருக்கு மட்டும் ஒரு கட்டிங் அவரது மேனேஜரிடம் சொல்லப்பட்டது, வந்தது., பின்பு )  அந்த புகழ் பெற்ற அவரது விளையாட்டு ஆரம்பித்துவைக்க பட்டது அவராலேயே....


"சொல்லுங்க பார்போம்....சர்புதீன், எனது மனதில் உள்ள அந்த நபர் யார் என்று".. என்று அவரே ஆரம்பித்தார், 

ஓரளவுக்கு அந்த விளையாட்டை விளையாட வரும் என்ற போதிலும் அவரது எதிரில் எனது பதட்ட நிலை தொடர்ந்ததால் கண்டுபிடிக்க முடியாமல் போனது... ( அது... ஹர்ஷா போக்ளே )

"சாரி சார், பதட்டமாக இருக்கிறது... நீங்கள் எனது மனதில் உள்ள பெயரை கண்டுப்டியுங்களேன்" என்றேன்  , சரி என்று சிரித்துக்கொண்டே தலையாட்டினார், கேள்விகளை தொடர்ந்தார்..

"இந்தியனா?"

"இல்லை "

"ஆசியனா"?

"இல்லை"

"ஐரோப்பியனா?"

"ஆம்"

"ஆணா?"

"ஆம்"

"உயிரோடு இருக்கிறாரா" 

"ஆம்"

"ஐம்பது வயதை தாண்டியவரா?"

"இல்லை"

"அரசியல், கலை, விளையாட்டு இவர்ற்றில் ஒரு துறையை சார்ந்தவரா?"

"ஆம்"

"கலையா?"

"இல்லை"

"விளையாட்டா?"

"ஆம்"

"அது ஒரு பந்து இருக்கும் விளையாட்டா?"

"இல்லை"

"தண்ணீர் உள்ள விளையாட்டா"?

"இல்லை"

"அத்லேடிக்ஸ்?"

"ஆம்"

"நாற்பது வயதை தாண்டியவரா?"

"ஆம்"

"உங்கள் மனதில் இருக்கும் நபரின் பிளட் குரூப்பும், போல் வால்ட் வீரர்  செர்ஜி புப்காவின் ப்ளட் குறுப்பும் ஒண்ணா?"

 "ஹி ஹி ஹி ஹி" 

அதன் பின் அதே போன்று சில விளையாட்டுகளை விளையாடி, உலக விஷயங்கள், கல்வி, விளையாட்டு, தொலைக்காட்சி சானல்கள் என்ற பலதளங்கள் குறித்து மகிழ்ச்சியோடி அளவளாவினோம், சரியாக அரைமணிநேரம் கழித்து அவரே வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

எனது ரசனைக்குரிய விளையாட்டை அதில் மிகவும் பிரபலமான அவரது எதிரிலேயே, அவருக்கு எதிராகவே விளையாடுவேன் என்பதை நான் அவ்வளவு சுலபம் என்று நினைக்கவில்லை, எனது வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களுள் இது மிக மிக முக்கியமான ஒன்று! 

                                     வாழ்க்கை மிகவும் அழகானது  டிஸ்கி -
அவர் யாரென்று இன்னும் கண்டுபிக்காதவர்கள் விஜய் மற்றும் தனுஷின் மெகா மொக்கை படங்கள் மூன்றினை தினமும் மூன்று முறை பார்க்க கடவது!

( 1 மே  2012 )