பெண்களும், பெண்களைபற்றியும் .......!

பெண்களை குறித்து இந்த கட்டுரை இன்று எழுத காரணம் - தனது இரண்டேகால் வயதில்   எங்களை விட்டு பிரிந்த  மகள் சஹானா

பெண்கள் குறித்த எனது பார்வையில் எல்லோரையும் போல் எனக்கும் அம்மா குறித்த விசயங்கள்தான் முதலில்! சராசரி தாய் போன்றவர் அல்ல எனது தாயார்! எனக்கு தெரிந்து எல்லா மனிதர்களும் அவர்களது தாயாரை சிறிய அளவிலாவது ஏமாற்றி இருப்பார்கள். அடியேன் அப்படி செய்ததாக எதுவும் ஞாபகம் இல்லை. செய்த ஒன்றிரண்டு சிறிய சிறிய தவறுகளை பெரிதாகுமுன் கண்டுபிடித்து 'வெளு'த்திருக்கிறார்கள் சிலமுறை!

எனது வாழ்கையில் நான் கடைபிடிக்கும் பழக்கவழக்கங்களில் மிக முதல் நல்ல பழக்கம் " வாசிக்கும் பழக்கம்". எனது தாயார் நிறைய வாசிக்கும் பழக்கம் உள்ளவர்! திருவனந்தபுரத்தில் உள்ள தும்பா ராக்கெட் நிலையத்தில் அப்துல் கலாமுடன் பணியாற்றிய எனது நெருங்கிய உறவினர் நிறைய படிக்கும் வழக்கம் உள்ளவர். அவர் , என் தாயார், மற்றும் இன்னும் சில நெருங்கிய உறவினர்கள் மூலம் வந்ததுதான் வாசிக்கும் பழக்கம், எனது தயார் எனக்கு தந்த வெகுமதியாக இன்றளவும் நன்றியோடு பின்பற்றுவது "வாசிப்பு" எனது வயதை ஒத்த நண்பர்களில் அதிகம் வாசிக்கும் பழக்கம் எனக்கும் என் அண்ணனுக்கும் மட்டுமே இன்று வரை நீடிக்கிறது. நன்றி மா!

மேற்கொண்டு எனது தாயார் குறித்து கூற சென்டிமென்டான விஷயங்கள் கிடையாது. காரணம் எல்லோரையும் போல் சராசரி தாயார் அல்ல , அந்த சராசரி என்பது எல்லோருக்கும் பிடித்ததை பிடிக்கும் என்றாக இருக்கலாம், எனக்கு அந்த சராசரியைவிட வித்தியாசப்பட்டிருப்பது பிடித்திருக்கிறது!

பதின்ம வயதில் வரும் காதல், எனக்கும் வந்திருந்தது, அவரது தந்தை பெரிய ரவுடி என பெயர் எடுத்தவர். ஆகவே ஒரு வருடம் நீடித்த காதல் தந்தைக்கு (ம்) தெரிந்து ஒரு முடிவுக்கு வந்தது. பதினாறு வருடங்கள் கழித்து அந்த பெண்ணை பார்த்தபொழுது இரண்டு பேருக்குமே சிரிப்புதான் வந்தது. சங்கடங்கள் வரவில்லை. நாங்கள் மாடியில் சந்தித்துக்கொள்ள வைத்திருந்த டெக்னிக்குகள் ஏக் துஜே கேலியே -வுகளுக்கு   நிகரானது!

பதினாறு வயதில் சென்னைக்கு தொழில் செய்ய வரும் வரையில் பெண்கள் எனக்கு அவ்வளவாக சுவராசியம் தந்ததில்லை, காரணம்., எனக்கு பேசணும் என்று தோன்றிய பெண்களிடம் பேச தயங்கியதில்லை. அப்படியே பேசினாலும் எனது பேச்சில் சுவராசியம் இருக்காது. ஒரு பொறுப்புள்ள அவளது சொந்தக்காரன் பேசுவதை போல் இருக்கும். இன்றளவும் நான் பேசுவதில் அதே பிரச்சனைதான். ஓரிரு முறை மட்டும் பேசிய பெண்களாக இருந்தால் கண்டிப்பாக நான் ஏதோ பெரிய ***** போல் தெரியலாம். பழக பழக மட்டுமே தெரியும் "அடியேனும் சராசரி மனிதன்தான். ஏதோ கொஞ்சம் இவன் வித்தியாசப்படுகிறான் என்பது!"

சென்னையில் எனது அப்பாவின் தொழிலை அவ்வப்போது செய்துகொண்டு அனேக மனிதர்களை போல் சுற்றி திரிந்த காலத்தில் மீண்டும் ஒரு காதல் வந்தது.  தைரியமாய் பேசி அந்த பெண்ணை சிறிது குழப்பத்தோடு வீட்டுக்கு அனுப்பிவைத்தால்., அடுத்த நாள் ஒருவர் என்னிடம் கைகுலுக்கினார். "சாரி சார் இனிமே அந்த பெண்ணிடம் அப்படி சொல்லமாட்டேன்" என்று அவரிடம் வாலண்டைன்ஸ் மீது சத்தியம் செய்து அனுப்பிவைத்தேன். பின்னே அவர்தான் அவளது காதலராம். ஆனால் எனது 'முரளி'தனமான நடவடிக்கையால் அவர்கள் கல்யாணம் செய்து கொண்ட பின்னரும் என்னை அந்த காதலர் சந்திக்க வந்தார். திருச்சியில் இருப்பதாக சொன்னார்.- சென்றார், தற்போது எங்கே என்று தெரியவில்லை!

அடுத்த காதல்., சென்னையே சந்தித்த ஒரு சிறிய பூகம்ப நிகழ்வு நடந்த ( போங்கப்பா, போய் விகிபீடியாயாவுல தேடுங்க என்னைக்குன்னு ) மாதத்தில் நடந்தது. சென்னையின் புகழ் பெற்ற கல்லூரியில் படித்துகொண்டிருந்தார் அந்த பெண், அவர் இஸ்லாமிய சமயத்தில் சியா பிரிவை சேர்ந்தவர். ஏறக்குறைய இங்கும் அதே முரளி போன்றா சாப்டான நடவடிக்கைகள்தான். எந்த பெண்ணிடமும் பேச தயங்காத அடியேன் மனதில் கள்ளம் ( அதுதான் சார், காதல்) இருந்தால் பேச வராது போல. ஏறக்குறைய ஒரு ஆண்டுகள் பின்னால் அடிக்கடி சென்று வந்ததுதான் மிச்சம். வீட்டில் கல்யாணம் பேசி விட்டார்கள். யாருக்கா? எனக்குதான் பாஸ்! :-(

அதோடு அந்த காதல் எபிசொட் முடிவுக்கு வந்தது. தற்போது சென்னை போனால் சில நேரம் பார்க்க முடிகிறது. மெலிதாக புன்னகைப்பார்,( அப்படிதான் எனக்கு தெரியுது! ) அதன் அர்த்தம் யாருக்கேனும் தெரிந்தால் கீழ்காணும் எண்ணுக்கு தெரிவிக்கவும் - 1800 256 ...சரி... சரி அடிக்க வராதீங்க!

இவ்வளவு தூரம் வந்துவிட்டு சினிமாவில் எந்த மாதிரியான பெண்கள் பிடிக்கும் என்பதை சொல்லாமல் விட்டால் சினிமாகுத்தம் ஆயிடும். இதோ அதுவும்... பெரும்பாலும் சிறுவயதில் இருந்தே அழகான பெண்களை காண பிடித்திருந்ததே தவிர நட்பை இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணமெல்லாம் வந்ததில்லை. ( ஐஸ்வர்யா ராய் விதிவிலக்கு, காரணம் அடுத்து வருகிறது ...). எனது ரசனைக்கு பிடித்தவர்கள் என்று பட்டியலிட்டால் இவர்களை சொல்லலாம்! சுகாசினி, நதியா, குஷ்பு, சிம்ரன், சமகாலத்தில் அசின் , பார்ட்டிகளை தவிர்த்த திரிஷா - என்று பட்டியலிடலாம். நடிப்போடு கொஞ்சம் மூளையும் இருப்பதாக நினைக்கும் நபர்கள்தான் எனக்கு உண்மையில் பிடித்தவர்கள்! ( சென்டிமென்ட் ஒன்று - நடிகை தேவயாணி அவர்களை உடன்பிறந்த அக்கா போல என்று சொல்லித்திரிந்த காலம் உண்டு!

ஏறக்குறைய எனது சொந்தங்கள் , பந்தங்கள், பழகியவர்கள், பிரயாணங்களில் கவனித்தவர்கள் என்ற பலவகையிலும் அடியேன் பார்த்த வகையில் பெண்களிடம் எனக்கு பிடிக்காத சில விஷயங்கள் ...இதோ ( இதை தவிர்த்து மற்றதெல்லாம் பிடித்த விஷயங்கள் என்று வைத்துகொள்ளலாம்)

குழந்தைகளுக்கு தாயான பிறகு உடல் மீது காட்டும் அக்கறையின்மை

பிடிக்காத வஸ்துகள், உணவுகள் என்று பலதையும் அண்டவிடாத அடம்பிடிக்கும் பழக்கம் ( சாம்பிள் ஒன்று - ஒருவருக்கு சிக்கென் பிடிக்காது, அது தெரியாமல் ஒருவர் " சிக்கென் சாப்பிடுறீங்களா"? என கேட்டால் , அவர்களது முகத்தை கவனியுங்கள், சிக்கென் தின்பவர்கள் எல்லாம் ஏதோ அசிங்கத்தை தின்பது போல் " பிடிக்காது" என்பார்கள்.

உலக விசயங்களில் மிக சிறிய அளவுகூட விபரங்கள் ஏதும் தெரியாமல் இருப்பது (அரசியல் -விளையாட்டு - அறிவியல் - வரலாறு எதாவது ஒரு துறையை பற்றி கொஞ்சமேனும் .. ஹூஹும் )

நிறைய குடும்ப பிரச்சனைகளுக்கு பெண்கள்தான் பிள்ளையார் சுழியாக இருக்கிறார்கள். அதற்கான எனக்கு தெரிந்த மிக முக்கிய காரணம் " இரு சொந்த கார பெண்கள் சந்தித்துகொண்டால் அவர்களால் அன்னா ஹாசாரே பற்றியா பேச முடிகிறது, குடும்ப உறுப்பினர்கள் குறித்துதான் பேசிக்கொள்கிறார்கள், அதில் ஆட்டோமேட்டிக்காக சிறிய சிறிய எக்ஸ்ட்ரா பிட்டிங்குகள் ....அப்படியே வளர்ந்து.... சரி விடுங்க..விடுங்க!


இப்ப கடைசியாக .... சில டச்சுங்குகள்...

எனது பதினெட்டாவது வயதில் அறிமுகமானவர் அந்த நபர், என்னை விட பதிமூன்று வயது மூத்தவர். அவரது இடத்துக்கு அடிக்கடி டிவி பார்க்க செல்வேன் . சில மாதங்கள் கழித்து அவரது மனைவியும் அங்கே வந்துவிட்டார் என்பதால் அடிக்கடி செல்லாமல் எப்போதாவது செல்வேன். அவரது மனைவியும் எனது வயதை ஒத்தவர்\ மாத கணக்கில் மூத்தவர்.சில காலங்கள் கழித்து அவரது குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாகி அவர்கள் குடும்பத்துள் ஒருவராக நடத்தினார்கள். உடன்பிறந்தவர்கள் எல்லோரும் எனக்கு ஆண்களே என்பதால் அக்கா என்ற அந்த உறவு எனக்குள் மகிழ்வையே தந்தது. பெயரளவில் இல்லாமல் உண்மையிலேயே உடன் பிறந்த அக்காவிடம் எந்த அளவிற்கு உரிமை உண்டோ..... அதெல்லாம் கிடைத்தது. இந்த உறவு மூலம் அவரின் ஊரில் அடியேன் செல்ல பிள்ளை என்ற அளவிற்கு போனது!

இன்றளவும் அந்த அண்ணனும் சரி , அந்த அக்காவும் சரி , இவ்வுலகில் எனது மரியாதைக்குரிய நபர்களில் தாய்தந்தைக்கு நிகரானவர்களே! இவ்வுலகின் அடியேனுக்கு மிக வேண்டியவர்கள் / பிடித்தவர்கள் டாப் ஐந்து நபர்களில் அந்த அண்ணனும்/அக்காவும் ஒருவர்!

எனது கல்யாணம் நடந்து ஏறக்குறைய எட்டுவருடங்கள் ஓடிவிட்டது. பெற்றோர்களால் நடத்திவைக்க பட்ட திருமணம்தான்! இன்று வரை ஒரு முறை கூட எனது மனைவியை பெயர் சொல்லி அழைத்ததில்லை. கோபங்கள், அவசரங்கள், பொதுஇடங்கள், சோக நிகழ்வுகள்.... எந்த சூழலிலும் பெயர் சொல்லி அழைத்ததில்லை., காரணம் (எனக்கு) பெண் குழந்தை பிறந்தால் எந்த பெயரை வைக்க வேண்டும் என்று நினைத்துவைத்திருந்தேனோ... அந்த பெயரிலேயே எனது மனைவி வாய்த்ததால். புரிந்திருக்குமே....எஸ் அந்த அக்காவின் பெயர்தான் எனது மனைவியின் பெயரும்!

வாழ்க்கை மிக அழகானது!
ஜூலை 2011