சில கருத்துக்கள்

சற்றே நான் - லீனியராக இந்த இடுகை இருக்கலாம் . காரணம் இந்த இடுகையில் வரும் கருத்துக்கள் கூட நான் லீனியர் என்பதுதான். ஆகவே அதே முறையில் இருக்கட்டுமே என்று விட்டுவிட்டேன்  வேற ஒன்று இல்லை!

எம்.எஸ்.வீ , இளையராஜா , ரஹ்மான் மூவரின் இசையும் எனக்கு  ஒரே இனிமையை / மனதுக்கு நெருக்கத்தை  தருகிறது., ஆனாலும் இளையராஜா  சற்று கூடுதலாக மனதுக்கு நெருக்கமாக தெரிகிறார். காரணம் எனது 30+ வயதுதான்  என்பதை உறுதியாய் நம்புகிறேன். எனது கருத்துகளும் ஜெயமோகனும், சுஜாதாவும் கலந்தே இந்த இடுகையில் ஆங்காங்கே இருக்கிறார்கள் !

நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கை நாம் புரிந்துகொள்ளக்கூடிய அளவு சிறிதல்ல. மிகப்பிரம்மாண்டமான, மிகச்சிக்கலான ஒரு கூட்டியக்கம் இது. ஒன்று இன்னொன்றாக நீளும் நிகழ்ச்சிகளின் வலை.

மிக மிக அதிகம் அவர்களுக்குள் நேசித்துக்கொண்டு மற்றவர்களிடமும் நன் மதிப்பை கொண்டு வாழ்ந்து வருகின்ற  இரண்டு ரத்த சொந்தங்கள் தங்களுக்குள் வந்த ஒரு நில - வீட்டு தகராறை அவர்கள் உறுதியாய் நம்பும் மத புத்தகம் கொண்டு தீர்த்துக்கொள்ள முடியவில்லை. முற்றிலும் பிரிந்துவிட்டார்கள் . இதில் மத புத்தகத்தின் மீது தப்பு இல்லை என்பது மட்டும் புரிகிறது . நாளை எனக்கு ஒரு பிரச்சனை வரும் பொழுதும் இது போன்று அந்த புத்தகத்தை ஒதுக்கி வைத்துவிடலாமா என்பதுதான் ( எனக்கு ) இங்கே பிரச்சனை.

படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவதுதான். காரணங்கள் இல்லாமல் பேசினால், எதிர் பக்கம் இருக்கிறவர் இப்போதெல்லாம் குழம்புவதாக தெரிகிறது.அதே நேரம் யாரேனும் முதலில் தொடங்கினால்  அர்த்தம் நேரிடை அர்த்தமாகி விடும் வருங்காலங்களில் ...

ஏறக்குறைய சில மாதங்களாக லவ்ஹீக வாழ்க்கை சார்ந்த காரணங்களால் மற்ற விடயங்களுக்கு  தினமும் ஒரு மணி நேரம் என்று நேரத்தை வகுக்க வேண்டியதாக இருந்தது... முடிந்த அளவில் என்னை சுற்றிலும் நடக்கும் எல்லா விடயங்களின் மீதும் குறைந்தபட்ச ஆர்வம் உண்டு என்பதால் நாளிதழ் வாசிப்பது முதற்கொண்டு டிவி நிகழ்சிகள், உலக நிகழ்சிகள் எல்லாவற்றிலும் நடப்பதை இந்த மாதிரியான ப்ளாக் -இணையதளங்கள் மூலமே அறிய முடிகிறது. கவனிக்க பட வேண்டியதாயின் தனியே நேரம் ஒதுக்கி அது குறித்து அவதானிக்க வேண்டியதாகிறது! 

இசைத்தட்டின் நடுவே உள்ள அச்சு அதைத் தூக்கிச்சுழற்றுவது போல ஒரு சமூகத்தின் கருத்தியல் மையமே அதை இயக்குகிறது. அதில் எல்லாக் கருத்துக்களுக்கும் இடமுண்டு. சுவனப்ப்ரியனும், இக்பால் செல்வனும், கேபிள் சங்கரும்  அதில் பங்களிப்பாற்றுகிறார்கள். த்ரிஷாவும், ஆனந்த விகடனும்  அதில் பங்களிப்பாற்றுகிறார்கள். கருத்துக்கள் என்பவை ஒன்றுடன் ஒன்று மோதி சமரசம் செய்தும் மீறியும் செயல்படுகின்றன.

http://bolstablog.files.wordpress.com/2008/11/man-arms-spread-sunrise.jpg


ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சில வேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது. எனக்கு மிக மிக சிலரிடம் இந்த நம்பிக்கை இருக்கிறது அதில் முதன்மையானவர் எனது நம்பிக்கையை உடைத்துதான் இந்த இடுகையின்  /  கருத்துக்களின் ஆதார தொடக்கம்!

என்னை சுற்றிலும் நடப்பதை கூர்ந்து கவனித்து வந்தாலும் அதன் சாராம்சத்தை இதுதான் என்று அறுதியிட முடியவில்லை. ஒரு சில  உதாரணங்கள்   - எனது நெருங்கிய கோவை நண்பர்  மாற்று மதத்தில் இருந்து திருமணம் செய்தவர், அந்த பெண்ணை அவரது மதத்திருக்கு மாற்றியவர். ஆனால் தன பையனோ, மகளோ அவ்வாறு செய்ய அனுமதிக்கவே மாட்டேன் என்று தைரியமாக சொல்கிறார். அவரோ , அவரது மனைவியோ தேநீர் குடிக்கும் வழக்கம் இல்லாதவர்கள், அவர்களது பிள்ளைகளும் அப்படியே...- இவ்வாறு சொல்வதினால் மதம் குறித்து  பேசுகிறேன் என்ற எண்ணவேண்டாம்.

சின்னஞ்சிறு செயல் இந்த மாபெரும் வலையை உலுக்கலாம். பெரிய செயல் ஒன்றுமே ஆகாமலும் போகலாம். நம்மால் இதைப் புரிந்துகொள்ளவே முடியாது. நாம் செய்வதன் பலனை மதிப்பிட முயன்றால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆகவேதான் கீதை. ‘பலனை என்னிடம் விட்டுவிட்டு உன் தன்னியல்புக்கு உகந்த கடமையை மட்டும் செய்’ என்ற அறிவுரை. ஆனால் இங்கே செய்யப்படும் எச்செயலும் வீணல்ல என்பதும் ஓர் அனுபவமே. எல்லாச் செயலுக்கும் எதிர்ச்செயலுண்டு. ஆகவே எல்லாமே எங்கோ எப்படியோ விளைவுகளை உருவாக்கிக்கொண்டேதான் உள்ளன. அந்த எண்ணமே நம்மை செயல்நோக்கிச் செலுத்தவேண்டும்.

நாம் நம் அன்றாடவாழ்க்கையின் அர்த்தமின்மையை உள்ளூர அறிந்தே இருக்கிறோம். தேடிச்சோறு நிதம் தின்னும் வாழ்க்கை. பிரபஞ்ச அர்த்தத்தை உணர்ந்து இந்த அன்றாட வாழ்க்கையில் சும்மா அமர்ந்திருக்க எல்லாராலும் முடியாது. இந்த அன்றாட வாழ்க்கையின் வெறுமையை வெல்லவே நாம் செயலில் ஈடுபடுகிறோம். செயல் இல்லாவிட்டால் இந்த வெறுமை நம்மைக் கொன்றுவிடும். ‘போர் அடிக்கிறது’ என நாம் சொல்வதே அர்த்தமற்ற காலத்தை நாம் உணர்வதுதான். அதைத் தாண்டவே மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள்.

உதாரணம் இரண்டு - ஒவ்வொருவரும்  ஒவ்வொரு  விசயத்தில் மிகவும் உறுதியாய் இருக்கிறார்கள், தொப்பை பற்றி கவலை இல்லை, ஆனால் நீட்டாக சேவிங் மற்றும் உடையில் சமரசம் செய்வதில்லை. ரோட்டில் தான் செய்யும் தவறுகள் குறித்த எந்த லட்ஜையுமில்ல்லை ஆனால் அடுத்தவர் செய்தால்  திட்டுகிறார்கள். தனது தங்கையின் கணவன் போல் "தான்" இருக்கவேண்டும் என்ற எண்ணமே இல்லாமல், தனது தங்கையை "சூதானமாக" இருக்க அறிவுறுத்துகிறார்கள்...விகடனின் சமகால கவர்ச்சி அட்டை படங்கள் இன்னும்..... இன்னும்.... நிறையவே SURVIVAL குறித்து யோசிக்க சொல்கிறது இன்னும் நிறையவே...

உண்மையில் வேலையே குறி என்றிருப்பவர்கள் அந்த வேலை அளிக்கும் எந்த லாபத்துக்காகவும் அதைச் செய்யவில்லை. அந்த வேலை அவர்களின் அன்றாட அலுப்பை மறைத்து அவர்களை முன்னெடுத்துச் செல்லுகிறது என்பதனால்தான் செய்கிறார்கள். அதுவும் போதாமல் குடிக்கிறார்கள். சூதாடுகிறார்கள். அவ்வாறு செய்யும் செயல்கள் உருவாக்கும் வெறுமையை அவ்வப்போது உணர்ந்து இன்னும் சலிப்படைகிறார்கள். அதற்குப்பதிலாக நமக்குப்பிடித்த ஒன்றைச்செய்து இந்த அன்றாடவெறுமையைத் தாண்ட முடிந்தால் அதைவிட மகிழ்ச்சியானது ஏதும் இல்லை. நம் அடிப்படை இயல்புக்கு உகந்த ஒரு செயலைச் செய்வதன் மூலம் நாம் நம் நாட்களைப் பொருளுள்ளதாக ஆக்கிக்கொண்டால் வாழ்க்கை நிறைவுறுகிறது. அதற்கு அப்பால் வாழ்க்கைக்கு என பெரிய ‘நோக்கமோ’ ‘அர்த்தமோ’ இல்லை. இருந்தால் அது லௌகீக வாழ்க்கையில் அறியக்கூடியதும் அல்ல.

நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம். இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

மிக ஆச்சரியமான நான் 'கடந்த' 'விஷயம் என்னிடம் இருந்து கழன்று கொண்ட எனது ஒத்தை செருப்பை திரும்ப எடுக்க முடியாது என தெரியும்போது மீதி இருந்த மறுகால் செருப்பையும் அதே இடத்தில் விட்டு எறிந்ததை என்னில் அனேக பேருக்கு புரிய வைக்கமுடியவில்லை. ஆனால் எனக்கு  என்று இருக்கிற ஒரே எதிரி  என்று ஒருவர் இருந்தாலும் அவரது எதிர்ப்புக்கு தவிர்த்த மற்ற விசயங்களில் எனது எதிரியை இன்னமும் / இப்பமும்  பாராட்ட முடிகிறது.

எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ண மாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப்பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதை யாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத் தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

கடைசியாக சில வார்த்தைகள்.....

இயல்பு, கல்வி, வளர்ப்பு,  ஜெனடிக், சூழல், அன்றைய சூழல் , பொருளாதார நிலைமை, குடும்ப சூழல், சமுதாயம், மத நம்பிக்கை, சொந்த நம்பிக்கை இன்னும் பல என்று சேர்ந்த கலவையே ஒருவனது சிறிய நடவடிக்கைக்கு கூட அடிப்படை காரணமாக இருக்கிறது.

இவையாவும்  சொல்வதினால் மட்டும் நான் யோக்கியனாகிவிட முடியாது / மாட்டேன்., ஆனால் எந்த வேலையை செய்தாலும் அதில் இருக்கிற அரசியல்,  சுய லாபங்கள்  etc  எல்லாமும் நன்கு புரிகிறது...

ஆக...

SURVIVAL OF THE FITTEST!                        ( அக்டோபர் 2012)