சில கட்டளைகள்

கீழ்காணும் விடயங்கள் யாவும் எனக்கு நானே சொல்லிகொண்டது. மற்றவர்களுக்கு இது உதவும் எனும் பட்சத்தில் மகிழ்ச்சியே...

கடனோடு இருப்பதும்...நோயோடும் இருப்பதும் வாழ்வை வாழ விடாமல் செய்யும்.

வசிப்பதற்கும்.... வாழ்வதற்கும் உள்ள வித்தியாசம் புரிந்தால் நன்று.

அந்தந்த 'கண''ங்களை அனுபவித்து வாழுங்கள்.

உற்சாகம் குன்றி இருப்பதும் நோய்வாய்பட்டிருப்பதும்  ஒன்றுதான்.

குழந்தைகளை மகிழ்விக்கும் சில வித்தைகளையாவது கற்று வைப்பது நன்று.

ஏழு மணி நேரம் கட்டாயம் உறங்குங்கள்.

ஒவ்வொருவரும் தனி தனி அடையாளம் கொண்டவர்கள் என்பதை புரிந்து கொள்வது  நலம்.

ஆரோக்கியத்தை பேணுவது போல அதனை வைத்து கொண்டாடவும் கற்றுக்கொள்ளுங்கள்.

ஏதேனும் ஒரு விளையாட்டை விளையாடி வருவது உங்களை உற்சாகம் ஊட்டும்! சீட்டு கட்டு விளையாட்டு இதில் சேராது.

ஏதேனும் ஒன்றினை செய்துகொண்டிருப்பதன் மூலம் வரும் மகிழ்ச்சி இவ்வுலகுக்கும் நல்லது...நாட்டின் உற்பத்தி திறனுக்கும் நல்லது.

உங்களின் பொழுதுபோக்கு விசயங்களை நீங்களே தீர்மானியுங்கள்.

வான்,கடல்,மலை, காற்று, நிலம் என்று எல்லா வகையான இயற்கையை அனுபவித்து மகிழுங்கள்.

தினமும் அரைமணி நேரமாவது எதையாவது வாசியுங்கள்....அரைமணி நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.

உங்கள் வீட்டு பெண்களிடம் எப்படி மற்றவர்கள் நடந்து கொண்டால் நன்றோ...அப்படியே நாம்  மற்ற பெண்களிடம் நடந்துகொண்டால் போதும்.

தினமும் புதிதாக ஒரு சின்ன செய்தியாவது / விஷயமாவது கற்றுக்கொள்ளுங்கள்.

சிறுவர்களுக்கு பெண்களின் உடல் குறித்த கண்ணோட்டம் எத்தகையது என்பது  அவனது வளர்ப்பில் தான் இருக்கிறது. பாலியல் கல்வி மிக அவசியம்!

வாரத்திற்கு...மாதத்திற்கு...வருடத்திற்கு என்று சில இலக்குகளை ஏற்படுத்தி ...செயல்படுத்தி  அதனை ஆராய்ந்து வாருங்கள்.

பயணங்களில் கிடைக்கும் நேரங்களில் கடந்த நிகழ்வுகளை அசைபோடவும்...பல புதிய பாடல்கள் எவ்வாறு உள்ளன என்பதை அறியவும் உபயோகித்து கொள்ளலாம். புதிய வழித்தடங்களில் போகும்  பட்சத்தில் வேடிக்கை பார்ப்பதே சிறந்தது.

வெந்நீர் வைப்பது...ஆம்லேட் போடுவது...தேநீர் போடுவது போன்ற  குறைந்த பட்ச "கலை"களையாவது கற்றுக்கொள்ளுங்கள்.

நிர்பந்தங்கள் இல்லாமல் உறவாடுவது ....உறவுக்கும் / உறவுகளுக்கும் நல்லது.

கன  நேரமாவது பொறுங்கள்.....தோன்றியதும் வினை ஆற்றாதீர்கள். பேச்சுக்கும் இதுவே பொருந்தும்.

உங்களை சுற்றி நடப்பதை கவனியுங்கள்.

உங்களை பற்றிய அபிப்பராயங்கள் உங்களின் செயல்கள் மூலமே ஏற்படுத்துங்கள்.

வாழ்வின் அர்த்தம் அனைத்தும் அழிந்து போக ரொம்ப மெனகெட வேண்டாம். எப்போதாவது தானே  என்று "குடி"க்க ஆரம்பியுங்கள்....அது போதும்!

                                                                                          ஜனவரி 2016